Sunday, February 10, 2013

கனவாய்ப் போனாலும்… நீ

கவிஞர்கள் என்றாலே கண்ணளில் விழுந்து கனவில் எழுவார்கள். வார்த்தைகளை கொண்டு பூமியை ரசித்தே குடித்துவிடுவார்கள் என்றெல்லாம் ஆலாபனை வியாபாரம் செய்வார்கள்.

இது ஒரு ரசிகனின் எழுத்துக்கள். கண்களும் வண்ணத்துப் பூச்சியும் பேசும் கதை இது. கண்களின் ஆழங்கள் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறையிருக்காது. மூழ்கி முத்துக் குளிப்பவர்களுக்குத்தானே அந்தக் கவலை. அவன் வேலையெல்லாம் அலைகளோடும் துள்ளி விளையாடும் மீன்களோடும் தான். கண்களில் ஏது அலை! ஏது மீன்கள்! என்பர்களுக்கு போதிமரத்து புத்தன் உபதேசித்தாலன்றி அதுபற்றியெல்லாம் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ரசிக்கத் தெரிந்தவனுக்கு மட்டும் என் எழுத்துக்கள் உன்ணவிருந்து. நல்லவேளையாக, "ரசிக்கத் தெரியாதவன் நேசித்தலாகாது" என்பதுபோல் வரைமுறைகள் ஏதும் எந்த இதிகாசத்திலும் எழுதிவைக்கப்படவில்லை.

விண்மீன்களை பிடிக்க வானுக்கு ஏறவேண்டாம், அதை உன் கண்களிலேயே பிடித்துவிடுவேன் என்பவன் கவிஞன். அந்தக் கவிஞனே அவள் (உன்) கண்களுக்குள் விழுந்தபிறகுதான் தெரிந்துகொண்டான், இதைவிட வானுக்கே ஏறியிருக்கலாம்.

கனவாய்ப் போனாலும்… நீ (உலாப்போகும் கனாத் தீவு!.)

எனக்குள் ஒரு கவிதை, அதன்
பிரசவத்திற்காய் தவித்துக்கொண்டிருக்கிறது

எல்லா சொற்களும்
தண்டனைக் கைதியைப்போல
விலகி நிற்கின்றன,
திரும்பக் குற்றம் இழைத்துவிடுவோமோ
என்கிற பயம்

முழுதாய் நான் நேசித்த ஒரே ஒருத்திக்கு
கடைசியும் முதலுமாக
என் எல்லாப் பிரியங்களோடும்
உன்னை நேசிக்கிறேன்!...

கடைசியும் முதலுமாக
என் அளவற்ற பிரியங்களையெல்லாம்
விட்டெறிந்து
உன்னை வெறுக்கிறேன்

இனிரு நேசித்தலுக்கோ,
வெறுத்தலுக்கோ இடமில்லை...

நான் சுமத்தப்போகும்
எந்தப்பாவமும்
அறிந்திரா - என்
பரிசுத்தமான சிநேகிதி!...

நீ அறிந்திரா மெய் இதுகேள்!

O O O O

பதின்ம ஆ(ற்)றில் - அறிந்தே 
இடி விழுந்தேன்
நரம்பு நதி என்னை
அடித்துச் சென்றது
கரையொதுங்கி எழுந்தால்
இழப்பு - ஒரு நொடிதான்
ஞாபகத்தில்
ஆயிரம் ஆண்டுகளின் நினைவுகள்

சம்மனசுகள் சூழ ஒரு தேவதை
வானில் இருந்து இறங்கி வந்து
என் விரல்பிடித்து நடந்தாள்

பூக்களின் சாரல் விழும்
என் சாலை ஓரங்களில்
அவளதும் எனதும் பாதங்கள் மட்டும்
நிறைந்திருந்தன

ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து
ஒருநொடி ரசிக்கலாம்
அவளை


கடவுள்  இரண்டு கண்கள்
கொடுத்ததே...
அவளை
ஒருகன்ணில் வாங்கி
மறுகண்ணில் சேமிக்கவா...

இதுதான் என் கனவு
இந்த மிகச் சாதாரணமானவனை தரிசித்த
தேவதையும் "நீ" தான்!

கோடி ராத்திரிகள் தூங்கி
எழுந்து
பிரசவித்த
ஒற்றை பகல் நீ

இருள் நிலவுகள் ஒளியைப் பொளியுமா
அது உன் கண்களால் மாத்திரம்
சாத்தியமான சங்கதி

தேவதை நீ
வந்தபிறகுதான்
றோஜாச் செடிகள் பேசுமென்றறிந்தேன்

தூங்கிக்கொண்டிருந்த என்
கனவுகள் எல்லாம்
படைக்கப்பட்டன!
நான் சுட்டுவிரல் காட்டும் அந்த நொடியில்
சுவர்க்கங்கள் திறந்துகொண்டன!
காலங்கள் கூட என்வசமே இருந்தன!
என் ஜென்மங்களின்
எல்லாப் பராயங்களிலும் - நான்
சாவகசமாய் உலாப்போனேன்!
எதிர்காலம் என்கிற நெட்டை நெடு வழி மட்டும்
ஏனோ அடைபட்டிருந்தது.

அத்தனையும் படைத்த பிரம்மாவாக நீ
பக்தபித்தனாய் நான்!

O O O O

பின்பொரு பொழுதில்
இதை  நீ உணர்த்தினாய்


உயிர் கொல்லும்
அழகிய விசம்
அந்தக் கண்கள்

O O O O

துள்ளிக்குதித்து வந்த
மனசை ஒரே சொல்லில்
வெட்டிச் சாய்த்தாய்,

ஒரு பலியாட்டைப் போல!

துடித்து வீழ்ந்தது காதல்!
கரைந்து கசிந்தன கனவுகள்...

தனிமையில்
நீழவழி நடந்தன இரவுகள்

நாட்கள் எல்லாம் என்னை கடந்து போயின
நினைவுகள் என்னை கடத்திப் போயின!

அன்பெனும் மொழி அகதியாயிற்ற
அனாதையாய் என் செல்லக் கவிதைகளும்
ேர்ந்ேசும்...

O O O O

ஏதேன் தோட்டத்து
விலக்கப்பட்ட கனிதான் காதலோ!..

பரிசளிக்கப்பட்ட அத்தனை இன்பங்களையும்
பறித்துக்கொண்டு
சாத்தான்களிடம் என்னை ஒப்படைத்துச் செல்கிறாய் நீ

இன்னும் சம்மனசுகளை அனுப்பி என்னை
மீட்டுச் செல்வாய் என்கிற கனவுகளோடு நான்.

O O O O

நான் உன்னை நேசித்தேன்
யாரும் மனிதர்கள் அறிந்திரா பிரியம் அது
நான் உன்னை நேசித்தேன்
என் எல்லா வார்த்தைகளிலும் நீயே இருந்தாய்
என் ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்தவள் நீதான்
என் நரம்புகளின் இசைச் சுரங்களுக்கு
காரணமாய் இருந்தவள் நீ
என் காலங்களில் - நீமட்டும்தான் இருந்தாய்.
எனது பிறப்பே உன்னை சந்திப்பதற்காகத்தான்
பரலோகத்திலிருக்கின்ற பிதாவால்
எனக்காய் நீயும், உனக்காய் நானும் படைக்கப்பட்டோம்
என்பதாக எண்ணிக்கொண்டிருந்தேன்

நீ என்னை பிரிந்தாய் - தினம்
ஏதோ ஒரு நினைவில் என்னை
தூக்கிலிட்டாய்!..

அப்போதே எனது உலகம் சரிந்து
மூடியிருக்கலாம்!.....

விலகிவிடாதே
உன்னை ரசித்தவன் நான்
என் எல்லா பிரியங்களையும்
உன்னிடம்தான் நான்
செலவழித்துவிட்டிருக்கிறேன்
என்று கெஞ்சிக்கொண்டிருந்தன
என் புலன்களுக்குட்பட்ட - எல்லா
ஜீவ அணுக்களும்

நீயோ சாவகசமாச் சென்றுகொண்டிருந்தாய்!...

O O O O

எப்போதோ,
ஏதோ கொஞ்ச நாள்
வீடொன்றில் வாடகைக்கிருப்பவன் எவனும்
தன்
எஞமானன் வருகையின்போது
வெளியேற்றப்படுவான்
என்பது இயல்பு

காதல்வீட்டிற்கொன்று
இதில்
விதி விலக்கேது

O O O O

இனி நான் உன்னை ரசிக்கமுடியாது
இனி நான் உன்னை தியானிக்கமுடியாது
எனது பார்வையில்
இனி உன் விழிகள் சிக்கப்போவதில்லை
ஆனாலும்,

ஆனாலும்!……
என்னைத் தவிர
உன்னை யாரும்
அழகாய் பார்த்திருக்கமுடியாது.
என்னைத்தவிர உன்னையாரும்
ஆழமாய் நேசித்திருக்க  முடியாது.

O O O O

எனக்குத் தெரியும்
இந்த நாள் வரும் என்று....

பகல் இரவாயும்
இரவு பகலாயும் மாறி மாறி
பூமியின் முகம் கபட நாடகமாடும்போதே
எனக்குத் தெரியும்
இந்தப் பிரியமும் அழிந்து போகுமென்று


எனக்குத் தரமுயாத என்மீதான் உன் பிரியத்தால் என்ன பயன்?...
 எனக்கு தரக்கூடிய உன் வெறுப்பை தா.
அதுதான் உன்னிடமிருப்பதில் எனக்குச் சொந்தமானது.

O O O O

இதுபோலத்தான்
வண்ணத்துப் பூச்சிக் காதலும், கதைகளும்…

பூமியில் ஒளி விழுந்தால்தான்
அதற்கு நிறங்கள் கிடைக்கின்றன
ஒளி விழாதுபோனால்
பூமியின் முகத்திற்கு நிறமே இல்லை

ஒளி விழாத பூக்களை
வண்ணத்துப்பூச்சிகள் நாடுவதில்லை

நான்
ஒளியே இல்லாத ஓர் உலகத்திலிருந்து
என் காதலை உணரும்
வித்தை கற்க தயாராகிறேன்

ஜீவ ஒளியில் காண்கிற காட்சியே நிஜம்
இரண்டு ஜீவ ஒளிகள் கலக்கும் ஜோதியே
மெய்க்காதல்

O O O O

விலகிவிடாதே
உன்னை ரசித்தவன் நான்
என் எல்லா பிரியங்களையும்
உன்னிடம்தான் நான்
செலவழித்துவிட்டிருக்கிறேன்
என்று கெஞ்சிக்கொண்டிருந்தன
என் புலன்களுக்குட்பட்ட - எல்லா
ஜீவ அணுக்களும்

நீயோ சாவகசமாச் சென்றுகொண்டிருந்தாய்...
O O O O
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
10 Feb 2013