Tuesday, June 12, 2012

நீ இன்னொரு நான்

தான் பெற்றெடுக்க இருக்கும் தன் மகனோடு பேசும் ஒரு பெண்ணின் பரிபாசை இது. உலகத்தையே அன்னியப்படுத்திவிட்டு தனக்கென ஒரு உலகம் படைப்பதாய் காண்கிறாள். அதன் அறிமுகம்தான் இந்தக் கவிதை. 
 
 
 

   

(நீ இன்னொரு நான் - ஒளிப்படம்)  

எனக்குள் இருக்கும்
இன்னொரு மனிதா
இன்று நான் உன்னை
காணப்போகிறேன்!...

இராப்பகலாய் இம்சைகள் செய்தாய்,
இனிக்கும் கனவுகள் தந்தாய்,
நீ யாரோ இல்லை - நானேதான்

என்னை நானே காணவரும்
சந்தர்ப்பம்,
என்னுள் நானே சிரிக்கிறேன்...
எனக்கே சொல்லி அழுகிறேன்
சொல்லத் தெரியவில்லை...

இதை என்ன உணர்வென்று
சொல்லத் தவறிவிட்டது - என் மொழி

நீ இன்னொரு நான்

என்னைப் போலவே நடை,
என்னைப் போலவே பேச்சு,
இப்படி எத்தனையோ - என்னைப் போலவே...
குணங்களில் வரும்
புதிய நான்

நீ அடம்பிடித்தாலும்
உன்னை போகவிடமாட்டேன்...
என் உள்ளேயே இரு....
வேண்டுமானால், கோபம் தீர
உதை ஒன்று தா - உள்ளே
ஒரு சுற்று, சுற்றிவா...
எந்த வலியையும்
தாங்கிக்கொள்கிறேன் - என் செல்லமே
இன்னும் கொஞ்சநாள்
எனக்குள்ளேயே இரு

உனக்காக பத்தியமிருந்து,
உனக்காக மகிழ்ந்திருந்து,
உனக்காக தூங்கி, விழித்து...
இப்படி உனக்காய் -  என்னில் நான்
பணிவிடை செய்துவளர்க்கும்
என் தெய்வம் நீ
நான்தான் உன் கோவில்

உன்னை யாரிடமும் தர மனமேயில்லாமல்
நான் மட்டும் நேசிக்க, 
நான் மட்டும் ரசிக்க...
மறைத்துவைத்த காலம்
பத்தே மாதங்களா...
அது என் பாதி  யென்மம்

என் நினைவெல்லாம்...
நானும் - நீயும்
என் பொளுதெல்லாம்
உனக்கும் - எனக்கும்
நான் சேமித்துவைத்திருக்கும்
பிரியங்கள் எல்லாமே.. உனக்கேதான்
செலவுசெய்ய வா என் செல்லமே...

உன்னை
கொஞ்சுவதற்கு கொஞ்சம்...
கெஞ்சுவதற்கு கொஞ்சம்...
திட்டுவதற்கு கொஞ்சம் என்று
நான் செய்து வைத்த வார்த்தைகள் கொஞ்சமா?...
காணும் கனவுகள் எத்தனை!....
என்றாவது புரியுமா உனக்கு

OOOO

நீ யாரென்று
உனக்க்கும் - இந்த உலகிற்கும்
நான் தான் அறிமுகம் செய்யப்போகிறேன்

நீ என் தேவகுமாரன்
நீ என் ராஜகுமாரன்
நீ என் ஜீவநாதம்
நீ என் குட்டிச்செல்லம்
நீ என் செல்லமகன்

நீ என் சின்ன எதிரி - என் செல்ல நண்பன்

என் குளந்தைப் பிம்பம் - நீ
கடவுள் உருவம் - நீ

புன்னகை நிறைந்த
பூங்குவளை...
தவள்ந்து வளரும் றோஜா...
தத்தி நடக்கும் தங்கமயில்...
உன் மழலை மொழிக்கு -  இந்தப் பூமியே விலை

செல்லச் சிரிப்பால் மோட்சங்களை
வாங்கிவரும் சம்மனசு - நீ

எனை அழுது தண்டிக்கும் ஆசான் - நீ

நினைத்தே ரசிக்கும் சிசுவும் நான்
உன்னை நெஞ்சில் வைத்து கொண்டாடும் தாயும் நான்

OOO

நான் படைக்கும் என் புதிய உலகமே
வர இருக்கும் என்
ராஜகுமாரனே
அம்மாவின் கோரிக்கைகள் கொஞ்சமிருக்கிறது...
கேளடா

என்னோடு சிறிதாய்
சண்டைபோடு...
செல்லமாய் அதட்டு...
என் மனசை உடை... நீயே வந்து பொருத்து
திரும்ப உடை....
இவைகளுக்காகவும்தான்
என்னை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஏமாற்றிவிடாதே!...

வார்த்தைகள் உள்ளே தீண்ட
விழியால் வெளியே குத்தி
முகத்திலிருந்து கழராத புன்னகை செய்

நான் உலகை மறந்துபோகிற - உன் தியானத்திலிருக்கும் பொளுது
வந்து சீண்டி என் நினைப்பைக் கலை!

இந்தச் சந்தோசத்தை
இழுத்து இழுத்து... என் ஆயுள்வரை மூடு
இது உன் உயிரின் கூடு - என் செல்ல மகனே


எப்போதும் என்னை பிரியாதிரு...

செல்லக் கொஞ்சல்களுக்காக
என்னை - அலையவைத்து
அதிகமாய் அழவைத்துவிடாதே...

நீ வளர்ந்து பெரியவனாகி
என்னை உன் மகளாய் கொள்ளவேண்டும்
செய்வாயா?...
என் செல்ல மகனே...

 

No comments: