Wednesday, March 17, 2010

நிரபராதிகளின் தண்டனைக் கைதி


கண்களை
தண்டனைக்குத் தந்த
கனவு - காதல்

நிரபராதிகளின் தண்டனைக் கைதிதான் காதலோ

இன்னமும் நீ நம்பத்தயாரில்லை

வழிவிடு என் வார்த்தைகளை
நானே எடுத்துக்கொள்கிறேன்

உன்னில் இருந்து
என் சட்டை வாசத்தையும்
துடைத்துவிடு

இன்னொரு தடவை
என்மீது
நீ அக்கறை காட்டாத்தபடிக்கு
உன்னை நீ பார்த்துக்கொள்

என்னை நியாயப்படுத்தி
உனது பிரியத்தில்
வாழ்வதில் - என்னக்கு
நிர்ப்பந்திக்கப்பட்ட
மரணம்

மாறாக காதல்
நீயாக
நானாக
புரிந்துகொள்வது

நீயாக என்னையும்
நானாக உன்னையும்
சேர்வது பிரியம்

பிரியம் - காதல்
இரண்டும்
கடந்து
என்னை நானாக
எனக்கு உண்மையாக இருக்க
விரும்புகிறேன்

கண்களை
தண்டனைக்குத் தந்த
கனவு - காதல்

நிரபராதிகளின் தண்டனைக் கைதிதான் காதலோ

Saturday, February 13, 2010

காதலுக்கு என்னைத் தெரியும்


காதல் என்பது
இசை பாதி
கவிதை பாதி
இசை மனசின் ஓசை என்றால்
கவிதை மனசின் பாசை

சொர்க்கம் பாதி சுவை
நரகம் பாதி சுவை
தரும்
அதிசயக்கனி காதல்

எழுதி எழுதித் தீராத வார்த்தை காதல்

உயிருக்கும் உடலுக்கும்
இடையிலான
இரகசியப் பாதை காதல்

ஆன்மாவுக்குள் ஒலிக்கின்ற
அதிசயத் தந்திகளின்
ஸ்பரிச நாதம் காதல்

ஒற்றைச் சொல்லில்
பொசிந்து கசிகின்ற
நிலாக்குளிரும் நெருப்பும்
காதல்

சூரியனும் நிலவும் சந்திக்கும்
சாத்திய வெளி காதல்

என் தோட்டத்து செடிகளெல்லாம்
சிரிக்கும்போது - ஓர்
றோஜாப் புன்னகை மட்டும்
செத்தவண்ணமிருக்கிறதே
காதல் வந்திருக்குமோ!

oooo

உனக்குத் தெரியாதது

உன் பெயர் சொல்லும்
அந்த எழுத்துக்களுக்குத்தான்
எத்தனை கர்வம் - அவை
என் குரல் நாணில் ஏறும்போதே
இருதயப் பாறையையும் சேர்த்து அல்லவா
அதிர்ந்துபோகிறது

தெருவோரம்
விழியால் வழிப்பறிசெய்தாய்

யன்னலேறிக் குதித்திறங்கிய
நிலவில் நீ
பாதிராத்திரியில்
ஒளிச்சோதியாய் வந்தவளே
கன்னமிட்டுத் திருடுவதற்கு
இதயத்தில்
வசதி என்ன கண்டாயோ

என் உணர்வுகள்
இப்போது உன்
செல்லப் பிள்ளைகள்

இனி - காகிதம்

என்றும் என் பிரியமானவளுக்கு!

பூக்களைவிடப் புனிதமானது எது என்று தேடிப் பார்க்கிறேன், 'பிரியம்' என்கிற வார்த்தையை தவிர எதனைதடவை எழுதினாலும் வேறெதுவும் என் எண்ணங்களுக்குச் சிக்கவில்லை. அந்த பிறேமையின் நிஜதை இப்போது நான் உணர்வது உன்னிடம்தான் என்பதை உனக்குச் சொல்ல நினைக்கிறேன், ஆனால் நமது வார்த்தைகள்தான் விடுமுறை எடுத்துக்கொண்டு போய்விட்டனவே.

பூக்களின் சாரல்விழும் சாலையோரத்தில் தென்றல் வேலை நிறுத்தம் செய்வது போலவும், மேகமும் நட்சத்திரங்களும் விரக்த்திதில் அலைவதுபோலவும், மேனிப்பரப்பெங்கும் இருதயத்துக்குள்ளும் தந்திமீட்டும் இசை - இப்போதுமட்டும் தெள்ளமுதுக்குக் பதில் மருந்தாய்க் கசப்பதுபோலவும் , இன்னும் என்னைவிட நான் நேசிக்கும் கவிதை என் கையைவிட்டுப்போவது போலவும் தோன்றுகிறதே ஏன்? இன்னும் எனது சில வார்த்தைகள் அனாதையாய் அலைகின்றனவே ஏன்? இப்படி காரணங்கள் கற்பிக்கவியலா கேள்விகள் தோன்றும்போதெல்லாம் அவை எனது பிரியத்தை இன்னும் இன்னும் வளர்ப்பதாகவே எனக்குப் தெரிகிறது.

உன்னிடம் எனது பிரியம் எதிர்பார்ப்பதென்ன என்று அடிக்கடி நான் என்ணிப்பார்க்கிறேன், 'ஒன்றுமில்லை' என்கிற பதிலைத்தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எதுவுமில்லை என்பதில் உள்ள அர்த்தங்களை கூட நான் ஆராய்ந்துபார்க்கிறேன். என் பிரியசகி, அது எனது பிரியங்கள் உன்னிடம் வந்துசேரவேண்டும் என்கிற அளவிலா ஆசை எனும் மறையுண்மையாகத்தான் இருக்கமுடியும். மாறாக உனது பதில்ப் பிரியத்திற்காக அவை காத்திருப்பதாக இன்னும் எனக்குத்தோன்றவில்லை.

ஏன்? எதற்கு? எப்படி? இதுபோன்ற கேள்விகளை இப்போதெல்லாம் நான் நம் பிரியத்தின்மீது பிரயோகிப்பதில்லை. காரணம், அவை நம் பிரியத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதாகத்தெரிகிறது தோழி. நமது நேசம் இந்தக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

இப்படி நமது நேசம் பற்றி காலத்துக்கும் பேசலாம். இயல்பாக மலர்ந்திருக்கின்ற நமது சிநேகத்தோட்டத்தில் நேசம் என்கிற நீர் மட்டும் இறைத்தாலே போதும் ஆரோக்கியமான அன்புப் பூக்களுக்கு குறைவிருக்காது. மாறாக செயற்கை இரசாயனங்களை கலந்து காகிதப் பூக்களைப்போல் நமது முகங்கள் புன்னகைத்து என்னபயன் அங்கே உண்மையான மகிழ்ச்சி ஏது? சகி, பொய் பூசாத யதார்த்த வாழ்வு மிகவும் சுவையானது. ஆனால் என்ன வலிகளின் நரம்புகளால் பின்னப்பட்டிருக்கும். அந்த வலிகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தெறிகின்ற போதுதானே சுகமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வலிகளே இல்லாதுபோனால், துன்பமே இல்லாதுபோனால், எல்லாமே கிடைத்துவிட்டால் வாழ்வு சலித்துப்போகும் தோழி. பிறகு மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் தவமிருக்கவேண்டும்.

ஆதலால் தோழி, நான் நானாக இருந்துகொண்டே உன் உணர்வுகளோடும் உன்னை நேசிக்கிறேன்.

இப்படிக்கு
வாழ்வின் எல்லைவரை, பரிமாறலோடும், புரிதலோடும், பிரியத்தோடும் பயணிக்கும் பேச்சுத்துணை.